mercredi 15 janvier 2014

குறிஞ்சா புட்டு







எனக்கு சின்ன வயசில அம்மா குஞ்சி இந்த புட்டு செய்து தாறவா. போன கிழமை நான் கடைக்கு போன நேரம் குறிஞ்சா மா வாங்கினனான் . குறிஞ்சா இலை சலரோக ஆக்களுக்கு நல்ல பலனை குடுக்கிற இயற்கையான இலை. இந்த இலை  கொஞ்சம் கைக்கும் . அதுக்கு விரும்பினால் சகரின் போடுங்கோ .
என்ன வேணும் :
 
குறிஞ்சா இலை ஒரு கட்டு .

சிவப்பு பச்சை அரிசி மா 500 g.
உப்பு தேவையான அளவு.
தேங்காய் பூ தேவையான அளவு .
பட்டர் 20 g.
கூட்டல் :
 
குறிஞ்சா இலையை வெய்யிலிலை காய விடுங்கோ . இலை சுறுண்டு வந்தால் பிறகு கல்லு உரலிலை போட்டு மாவாய் வாறவரைக்கும் இடியுங்கோ. இடிச்ச மாவை அரிதட்டிலை போட்டு அரியுங்கோ .அரிச்ச குறிஞ்சா இலை மாவையும் சிவப்பு பச்சை அரிசி மாவையும் கலந்து சுடுதண்ணியம் விட்டு புட்டுக்கு குளைக்கிற மாதிரி பதமாய் குளையுங்கோ. கையாலை சின்ன சின்ன  குறுணியாளாய்
உலுத்துங்கோ. தேங்காய் பூவை கலந்து அவிய விடுங்கோ. புட்டு அவிஞ்சால் பிறகு பட்டரை போட்டு கிளறி விடுங்கோ. இப்ப குறிஞ்சா புட்டு நீங்கள் சாப்பிடலாம் .



மைத்திரேயி
14/01/2014

mardi 14 janvier 2014

என்ன நியாயம் ????


என்ன நியாயம்???



கட்டிக்கரும்பே மரகத மணியே
பவழம் பவழம் எம் இதழ்கள்
என்று சொன்னவர்களும்
நீங்கள்தான் .......
 

கயல் விழி என்றும் ,
எம் விழி அம்பால்
பெட்டிப் பாம்பாய் அடங்கினோம்
என்று ,

சொன்னதும் நீங்கள் தான் ........
 

எங்கள் கொடியிடை அசைவில் ,
உங்கள் மதி
தறி கேட்டுப் போனதாய்
சொன்னதும் நீங்கள்தான் ........
 

பாலைவனமாய் இருந்த
உங்கள் வாழ்வில்
கோடைத் தென்றலாய்

நாங்கள் வந்தோம்
என்று
சொன்னவர்களும் நீங்கள் தான் ......

இப்பிடி,

சும்மா இருந்த எங்களை
உங்கள் கற்பனை குதிரைகளால்
மேய்ந்து விட்டு !!!!!!!!
இப்பொழுது மட்டும்
மோகம் கலைந்தவுடன்
" இல்லாள் "
என்று சொல்வது என்ன நியாயம் ???



 மைத்திரேயி
10/01/0/2014

mercredi 13 novembre 2013

நான் போட்ட உடுப்பு

நான் போட்ட உடுப்பு 




இடுப்பைத் தொடும் தலைமயிருடனும்
அதில் ,
சின்னஞ் சிறு அலரிப் பூவுடனும்
மிடியுடனும்  புறொக்குடனும்
இல்லாவிட்டால்  ,
ஹாஃப் சாறிடனும் பஞ்ஞாபியுடனும் 
வளைய வந்த எனது பெண்களில் ,
நான் கொஞ்சம் வித்தியாசமானவள் !!!!

நான் அணிந்த உடைகள்
நான் விரும்பி அணிந்த உடைகள் !!!!
இந்த உடைகள்
என்னைப் போன்ற
பல பெண்களின்
அடிமை வாழ்வை உடைத்தெறியும் .......
அதில் ,
எனது நாடி நரம்பெலாம் ஓடி நிக்கும்
எனது சொந்த மண்ணும்
ஒருநாள் விடுதலை பெறும் ...
அதுவரை ,
நித்திரை என் அகராதியில் இல்லை ....

மைத்திரேயி
13 கார்த்திகை 2013

jeudi 7 novembre 2013

மைத்திரேயியின் சமையல்கட்டு 06 ( மரவள்ளி கிழங்கு புட்டு )

மரவள்ளி கிழங்கு புட்டு




இப்ப இருக்கிற ஆக்கள் கூடுதலாய் மாவிலைதான் புட்டு அவிப்பினம் . பருத்திதுறையிலை மரவள்ளிக் கிழங்கிலையும் புட்டு அவிக்கிறவை . மரவள்ளிக் கிழங்கு கஸ்ரப்பட்ட ஆக்களின்ரை சாப்பாட்டு எண்டு இப்ப பெரிசாய் ஒருத்தரும் அதை மதிக்கிறேலை . எங்கடை பழைய ஆக்கள் மரவள்ளிக் கிழங்கை சாப்பிட்டே நல்ல சுக நயமாய் இருந்தவை . எனக்கு தெரிஞ்சு இதிலை புட்டு அவிக்கிறது குறைவு ஆனால் நல்ல சத்தான சாப்பாடு .

என்ன வேணும் :

மரவள்ளிக் கிழங்கு 1 கிலோ
பனங்கட்டி 1 - 3 குட்டான்
ஏலக்காய் 4-5 ( தேவையான அளவு )
பட்டர் அல்லது நெய் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

கூட்டல் :

மரவள்ளிக் கிழங்கை கொஞ்ச நேரம் மெதுவான சுடுதண்ணியிலை ஊறவிட்டு மண்ணை கழுவுங்கோ மரவள்ளிக் கிழங்கை 2- 3 துண்டாய் வெட்டி தோலை உரியுங்கோ வெட்டின கிழங்கை ஸ்கிறைப்பறிலை தேச்சு சின்ன துருவல் ஆக்குங்கோ ஒரு புட்டுப் பானையிலை மரவள்ளிக் கிழங்கு துருவலை போட்டு ஒரு 20 நிமிசத்திலை இருந்து 30 நிமிசம் வரை அவியுங்கோ மரவள்ளிக் கிழங்கு துருவல் அவிஞ்ச உடனை சூட்டோடை உப்பு ஏலக்காய் பட்டர் எல்லாத்தையும் போட்டு கலவுங்கோ இப்ப நீங்கள் சத்தான புட்டு சாப்பிடலாம்


மைத்திரேயி

07/11/2013

jeudi 29 août 2013

அவர்கள் பார்வையில்

அவர்கள் பார்வையில்


 

எனக்கு
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை

அவர்களின் பார்வையில்-
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன

சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைகள் ஆகும்

கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்

கணவன் தொடக்கம்
கடைக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்.

அ.சங்கரி



http://noolaham.net/project/01/16/16.htm

jeudi 18 juillet 2013

மைத்திரேயியின் சமையல்கட்டு 04 ( வட்டிலப்பம் )

வட்டிலப்பம்




என்ன வேணும்:

முட்டை 10

கித்துள் பனங்கட்டி 750 g

முந்திரிகொட்டை ( கஜூ ) 100g

தேங்காய்ப்பால் 2 கப்

ஏலக்காய் தேவையான அளவு

பட்டர் தேவையான அளவு


கூட்டல்:

கித்துள் பனங்கட்டியை சின்னதாய் வெட்டி தேங்காய் பாலுடன் நன்றாக கரையுங்கோ . முட்டையை நன்றாக அடிச்சு வையுங்கோ . பின்பு ஏலக்காயை பொடிசெய்து அடிச்ச முட்டையோடை சேருங்கோ . முந்திரிக்கொட்டையை சின்னதாய் வெட்டி கலவையிலை போடுங்கோ . பின்பு தேங்காய்பால் கலவையையும் ஒன்றாய் கலக்குங்கோ . இப்போ வட்டிலப்பதின்ரை கலவை தயார் . இந்த கலவையை பட்டர் பூசின சின்ன கிண்ணங்களிலை ஊத்தி நீராவியிலை ( steamer ) வேகவையுங்கோ .


மைத்திரேயி

18/07/2013

lundi 24 juin 2013

கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!!

கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!!


என் நிம்மதி எங்கே என்று

உன்னிடமே கேட்டேன் பார்,

கொள்ளை அடித்தவனிடமே

போய் புகார் செய்தமாதிரி

என்னைசெருப்பால் அடிக்க வேண்டும்........



உன் நினைவுகளோ

என்னை மூழ்கடித்து விட்டது

ஒரு ஆறு கட்டுமரத்தில்

ஏறி இருந்தது போல !!!!!!!!



என்னைக் கொள்ளை கொண்டவனே

நான் சுதந்திரமாய் சிரித்து

கனகாலமாகி விட்டதடா .

நான் சிரிக்க முயற்சி செய்கின்றேன்

நீயோ ,

ஏன் அழத் தொடங்குகின்றாய் என்கின்றாய்

நான் அழமுயற்சி செய்தாலோ ,

ஏன் சிரிக்கின்றாய் என்கின்றாய்

நீ என்னதான் சொல்லவருகின்றாய் ?????????



நான் சுகமாக இருக்கின்றேன் என்று

ஒருவரிடமே சொல்வதில்லை.......

ஏதோ இருக்கின்றேன்

என்றுதான் சொல்கின்றேன் .

நான் விரைவாக அமைதியான

இடத்திற்கு ஓடிக்கொண்டு இருக்கின்றேன் ,

உன்னைபற்றி தனிய இருந்து

யோசனை செய்வதற்கு

மைத்திரேயி

19/06/2013